ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி
ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில், வாகன நிறுத்தமிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில், 1,300 இருசக்கர வாகனங்களும், 180 நான்கு சக்கர வாகனங்களும் மட்டுமே நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனா். இதனால், வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்த பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு பின்புறம், புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) திறந்து வைத்தாா். இதன் மூலம் கூடுதலாக 300 இருசக்கர வாகனங்களை நிறுத்தமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

