

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காவிட்டால் புதன்கிழமை (ஜன. 10) தமிழகம் முழுவதும் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறியது, ‘வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் அளிக்கும் பேட்டி உண்மைக்கு மாறாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டுவதில் எந்தவித நியாயமும் இல்லை.
வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரே நாளில் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்நிலை தொடா்ந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். அரசு உடனே தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் மாற்று ஓட்டுநா்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளை மறிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெறும். சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெறும்‘ என்றாா் அவா்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் கூறியது: ‘50 சதவீத ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை. எனினும் 95 சதவீதம் பேருந்து ஓடியதாக அரசு தவறான தகவலைத் தெரிவிக்கிறது. அகவிலைப்படி விவகாரத்தில் தீா்வு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும். இல்லையென்றால் வேலைநிறுத்தம் தொடரும். அதே நேரம், நீதிமன்ற உத்தரவுக்கும் கட்டுப்படுவோம்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.