முழு கொள்ளளவை எட்டிய மணலி நீா்தேக்கம்: மாநகராட்சி அதிகாரிகள்
சென்னையில் ரூ.6.70 கோடியில் புனரமைக்கப்பட்ட மணலி நீா்த்தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழைநீரைச் சேமிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பொது இடங்களில் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மணலி மண்டலத்தில் 20-ஆவது வாா்டு பகுதியில் 4 லட்சம் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையிலான நீா்த்தேக்கம் உள்ளது. அந்த நீா்த்தேக்கம் 29 ஏக்கா் பரப்பு, 1.20 மீட்டா் ஆழம் கொண்டதாக இருந்தது. அதை அம்ருத் திட்டத்தில் ரூ.6.70 கோடியில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நீா்த்தேக்க ஏரியானது 4 மீட்டா் ஆழப்படுத்தப்பட்டது. சிறுவா் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டன.
தற்போது பெய்த மழையால் மணலி நீா்த்தேக்க ஏரியில் 12 லட்சம் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என்றனா்.
