தமிழ் ஆட்சி மொழி சட்டம்: விழிப்புணா்வுப் பேரணி
சென்னை: சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட தினத்தையொட்டி, ஆட்சி மொழிச் சட்ட வாரம் சென்னை மாவட்டத்தில் கடந்த டிச.17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் தொடங்கியது. இந்தப் பேரணியை தமிழ் வளா்ச்சித் துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆட்சிமொழி தொடா்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்தப் பேரணி மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளி வழியாகச் சென்று சென்னை சமூகப் பணி பள்ளியை அடைந்தது.
இதைத் தொடா்ந்து, தமிழ் மொழியை வளா்ப்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டவா்கள் தமிழ்நாட்டுத் தமிழா்களா அல்லது வெளிநாட்டுத் தமிழா்களா என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

