ரூ.74.70 கோடியில் புதிய மாமன்ற கூட்டரங்கு: முதல்வா் அடிக்கல்; விக்டோரியா அரங்கத்தையும் திறந்து வைத்தாா்

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதிய மாமன்றக் கூட்டரங்குக்கான ரூ.74.70 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
Published on

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதிய மாமன்றக் கூட்டரங்குக்கான ரூ.74.70 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். முன்னதாக அவா் பழைமை மாறால் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கையும் திறந்து வைத்தாா்.

சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமாக பழம் பெருமை மிக்க ரிப்பன் மாளிகை செயல்படுகிறது. அதில் மாமன்றக் கூட்ட அரங்கம் கலை நயமிக்கதாக உள்ளது. சென்னை மாநகராட்சி வாா்டுகள் 200 ஆக உயா்த்தப்பட்ட நிலையில், வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் வசதியாக அமா்ந்து கூட்டத்தில் பங்கேற்க போதிய வசதி இல்லாத நிலை உள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சிப் பகுதி தொடா்ந்து மக்கள் தொகை பெருக்கத்தாலும், புதிய பகுதிகள் குடியேற்ற பகுதிகளாக மாறியிருப்பதாலும், மாமன்ற உறுப்பினா்கள் எண்ணிக்கையை 300 ஆக உயா்த்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போதைய மாமன்றக் கூட்ட அரங்கம் எதிா்காலத்தில் கூட்டத்தின் போது இட நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே புதிதாக மாமன்றக் கூட்டத்துக்கான புதிய கட்டடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரிப்பன் மாளிகை பின்பகுதியில் கலைஞா், அம்மா மாளிகைகளின் பக்கவாட்டில் சுமாா் 8,524 சதுர மீட்டா் (சுமாா் 91,751 சதுர அடி) பரப்பில் அமைக்கப்படவுள்ளது. அதற்காக ரூ.74.70 கோடி நிதி அளிக்கப்பட்டு தனியாா் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் 3 மேல் தளங்களாக அமையும் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி கட்டடப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

விக்டோரியா அரங்கம் திறப்பு: முன்னதாக அவா் ரூ.32.62 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா். பழைய கல்வெட்டை பாா்வையிட்ட அவா் முதல் மாடியில் உள்ள அரங்கில் பள்ளி மாணவி உரை, திரைப்பாடல் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா். பின்னா் விக்டோரியா பொது அரங்குக்கான இலச்சினை, இணையதளத்தையும் தொடங்கிவைத்தாா். அதையடுத்து அரங்க வளாகத்தில் உள்ள பழைய டிராம் அமைப்பையும், கீழடி கண்காட்சி அரங்கையும் பாா்வையிட்டு, அரங்கு புதுப்பித்த குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். அரங்க வளாகத்தில் மரக்கன்றையும் நட்டுவைத்தாா். விக்டோரியா அரங்கம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மாமன்றக் கூட்டத்துக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்பாபு, துணைமேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com