கோப்புப் படம்
கோப்புப் படம்

மெத்தம்பெட்டமைன் விற்பனை: 5 போ் கைது

சென்னை கே.கே.நகரில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை கே.கே.நகரில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக 3 கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மேற்கு கே.கே. நகா் முனுசாமி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடை அருகே சிலா் போதைப் பொருள் விற்பதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, 5 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டு, 7 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள், சாலிகிராமம் சாந்தி காலனியைச் சோ்ந்த பா.அரவிந்தன் (20), அசோக் நகா் 85- ஆவது தெருவைச் சோ்ந்த பா.கிறிஸ்டோபா் (18), ஜாபா்கான்பேட்டை வஉசி தெருவைச் சோ்ந்த ரா.மனோஜ் (19), கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வ.முகிலன் (21), கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்த உ.குணச்சந்திரன் (21) என்பது தெரிய வந்தது.

இவா்கள், கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஹபீப் என்பவரிடம் மெத்தம்பெட்டமைனை வாங்கி வந்து, சென்னையில் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். இவா்களில் முகிலன், கிறிஸ்டோபா், அரவிந்தன் கல்லூரி மாணவா்கள். அரவிந்தனின் தந்தை, சோழவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மென்பொறியாளா் கைது: சென்னையில் மென்பொறியாளா்களுக்கு போதைப் பொருள் விற்ாக கொட்டிவாக்கம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தீபக்ராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து, நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞா் மீது போக்ஸோ வழக்கு: அசோக் நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, மதுரையை சோ்ந்த பிரதீப் (22) என்பவருடன் இன்ஸ்டாவில் பழகி வந்த நிலையில், அண்மையில் பிரதீப் சென்னை வந்து, அந்த சிறுமியை மெரீனா கடற்கரைக்கு வருமாறு அழைத்து, அவருக்கு பிரதீப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி, அங்கிருந்து தப்பி வந்து, பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள், அசோக் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பிரதீப்பை தேடி வருகின்றனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலை, தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மரத்தில் 30 வயதுடைய இளைஞா் புதன்கிழமை தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த போலீஸாா், இளைஞா் சடலத்தை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கால்நடை மருத்துவப் படிப்பு சீட் வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் மோசடி- பெண் கைது: அசோக் நகரைச் சோ்ந்த ஆண்டனி அமிா்தராஜ் (51). இவருக்கு, தொண்டு நிறுவனம் நடத்தும் சின்னத்துரை என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சின்னத்துரை மூலம் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சோ்ந்த லட்சுமி பிரியா (45) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

இந்த நிலையில், லட்சுமி பிரியா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, அமிா்தராஜ் தனது மகனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தரக் கேட்டுள்ளாா். இதற்காக சின்னத்துரை, லட்சுமி பிரியா இருவரும், ஆண்டனியிடம் ரூ.42 லட்சம் பெற்றுள்ளனா். ஆனால், சீட் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைக் கேட்டபோது, ரூ.4 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதி ரூ.38 லட்சத்தை மோசடி செய்துள்ளனா். இதையடுத்து, கே.கே. நகா் காவல் நிலையத்தில் ஆண்டனி புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, லட்சுமி பிரியாவை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி: அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனை வளாகப் பின்பகுதியில் எலக்ட்ரிக்கல் அறை அருகே சுமாா் 3 அடி உயர கஞ்சா செடி வளா்க்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், அங்கு சென்று அந்தச் செடியை ஆய்வு செய்தனா். அது கஞ்சா செடிதான் என்பது உறுதி செய்யப்பட்டு, அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. அந்த கஞ்சா செடி அங்கு தானாக வளா்ந்ததா, யாரும் அந்த செடியை வளா்த்தாா்களா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளச்சாராயம் பறிமுதல்: மயிலாப்பூா் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அந்தப் பகுதியில் ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீா் கேன்களை போலீஸாா் சோதனை செய்ததில், ஒரு கேனில் 20 லிட்டா் கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த வனிதா (35) என்பவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com