தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி சென்னை: 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!
கோடையில் சென்னை
கோடையில் சென்னை
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகிறது என்று ’தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம் பற்றிய ஆய்வில்(2025)’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்த ஆய்வில், தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வெப்பம் அதிகரிப்பு மற்றும் வெப்பம் உயர்வதால் உண்டாகும் வெப்ப அழுத்தம்(ஹீட்-ஸ்ட்ரெஸ்) ஆகிய பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் 25 மண்டலங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இதற்கான முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆம்... நகரமயமாக்கல், பசுமை வெளிகளை நீக்குதல், மோசமான திட்டமிடல் ஆகியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கீழ்காணும் பகுதிகளில் வெப்பம் அதீதமாக உயர்ந்துவருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • சென்னை

  • புனித தோமையார் மலை(சென்னை)

  • பூந்தமல்லி(சென்னை)

  • வில்லிவாக்கம்(சென்னை)

  • புழல்(சென்னை)

  • எஸ்.எஸ். குளம் (கோயம்புத்தூர்)

  • சூலூர் (கோயம்புத்தூர்)

  • பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்)

  • திருப்பூர்

  • பல்லடம்(திருப்பூர்)

  • திருப்பரங்குன்றம்(மதுரை)

  • மண்டபம்(ராமநாதபுரம்)

  • திருவெறும்பூர்(திருச்சிராப்பள்ளி)

  • சேலம்

  • ஈரோடு

  • கரூர்

  • குன்றத்தூர்(சென்னை)

  • தூத்துக்குடி

  • திண்டுக்கல்

  • கொடைக்கானல்

  • வேலூர்

  • சிவகங்கை

  • விழுப்புரம்

1985 - 2015 வரையிலான காலகட்டத்தில், சென்னையில் நகரமயமாகியுள்ள பகுதிகளின் அளவு 48 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, சென்னையின் நிலப்பரப்பில் 4-இல் 3-பங்கு பகுதி இப்போது காங்கிரீட் மற்றும் கட்டடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட கட்டுமானங்களிலிருந்து வெளிவரும் வெப்பம், அதிலும் குறிப்பாக, இரவில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் வெப்ப அளவும் நாளடைவில் அதிகரித்துள்ளது.

செயற்கைக்கோள் தரவுகளின்படி, சென்னையில் நிலப்பரப்பிலிருந்து வெளியிடப்படும் வெப்ப அளவு, 3 - 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இந்நிகழ்வானது, கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதிலும் குறிப்பாக, இரவில் வெப்பம் அதிகம் வெளியேற்றப்படுவதன் விளைவால் நம் உடலிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. உறக்கமின்மை, ஹீட்-ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத்தால் வரும் வாதம், உள்பட பல அசௌகரியங்களை நமக்கு ஏற்படுத்துகிறது.

இப்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, சென்னையில் 35 சதவீதம் மக்கள் போதிய வாழ்வாதாரமின்றி குடிசை, சேரிப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகள் அல்லது வசிப்பிடங்களெல்லாம் எளிதில் வெப்பத்தை ஈர்த்துக்கொள்ளக்கூடிய பொருள்களால் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் அதிகரிப்பால் இந்த மக்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்.

இந்தநிலையில், மரங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ப்பதும் குளங்கள், ஏரிகள் பாழாகாமல் பாதுகாப்பதும் சீரமைப்பதும் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் என்னென்ன என்பதும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பமயமாதல் நிகழ்வை வெறுமனே பருவநிலை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே கருதாமல், அரசு நிர்வாகப் பிரச்சினையாகக் கருதி முன்னுரிமையளித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில் இன்றைய நிலைமையில், ஓராண்டில் அதிக வெப்பம் நிலவும் ஹீட் - ஸ்ட்ரோக் நாள்களின் எண்ணிக்கை ’100’ என்று கணக்கிடப்பட்டுள்ளன.

இப்படியேவிட்டால், சென்னையில் 2050-ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு 150 ஹீட் - ஸ்ட்ரோக் நாள்களாக அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், வருங்காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் நிலவும் நாள்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Summary

Chennai, the capital of Tamil Nadu, is set to face severe heat stress in the next few years, according to the ‘Study on Urban Development and Heat Stress in Tamil Nadu (2025)’.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com