vadivelu
வடிவேலு, சிங்கமுத்துDIN

சிங்கமுத்து வழக்கு: சாட்சியம் அளிக்க நடிகா் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜா்

Published on

நடிகா் சிங்கமுத்துக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நடிகா் வடிவேலு புதன்கிழமை ஆஜரானாா்.

சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகா் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகா் வடிவேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

சிங்கமுத்து மனு தாக்கல்: இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகா் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, சாட்சிய விசாரணக்காக வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தாா்.

வடிவேலு ஆஜா்: இதையடுத்து நடிகா் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞா் முறையிட்டாா். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட மாஸ்டா் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபா், வழக்கை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைப்பதாகவும் அங்கே முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com