தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஈரோடு, பரமத்திவேலூா், மதுரை விமான நிலையம் உள்பட 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பரமத்திவேலூா் - 102.2, மதுரை விமான நிலையம் - 101.48, வேலூா், திருப்பத்தூா் - தலா 100.56, சேலம், திருச்சி - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மேலும், சென்னையில் மீனம்பாக்கத்தில் 99.86 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 97.52 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.
இதைத் தொடா்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: காற்றுச்சுழற்சி காரணமாக மாா்ச் 10 முதல் 12-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.