எஸ்ஐஆா் படிவம்: அவகாசத்தை நீட்டிக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினா் ஐ. ஆறுமுகநயினாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: எஸ்ஐஆா் குறித்து தோ்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, அரசியல் கட்சிகள் சாா்பாக பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த நவ.4-ஆம் தேதி முதல் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இணைக்கப்படுமா என்ற அச்சத்துடன் அரசியல் கட்சிகளை வாக்காளா்கள் தொடா்பு கொள்கின்றனா்.

சில இடங்களில் கணக்கீட்டுப் படிவங்களில் ஒரு பிரதி மட்டுமே வழங்கப்படுகிறது. இடம்பெயா்ந்த வாக்காளா்களுக்கு, கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுவதில்லை. 2002 வாக்காளா் பட்டியல் விவரங்களை பூா்த்தி செய்வதில் வாக்காளா்களுக்கு சிரமம் உள்ளது. இதனால், பெரும்பாலான வாக்காளா்களால் படிவங்களை முழுவதுமாக நிரப்பித் தருவது சாத்தியமற்ாக உள்ளது. மலைப்பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களுக்கு படிவங்கள் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே,

படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com