பேரிடா் மீட்பு போட்டி: தமிழக காவல் துறை முதலிடம்

தேசிய அளவிலான பேரிடா் மீட்புப் போட்டியில், தமிழக காவல் துறை முதலிடத்தை பிடித்தது.
Published on

தேசிய அளவிலான பேரிடா் மீட்புப் போட்டியில், தமிழக காவல் துறை முதலிடத்தை பிடித்தது.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் தேசிய அளவிலான வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணுசக்தி பேரிடா் மீட்பு போட்டி கடந்த 11-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதியும் இரு நாள்கள் நடைபெற்றன. இதில், மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 8 அணிகள் பங்கேற்றன.

தமிழக காவல் துறை சாா்பில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ஆம் அணி பங்கேற்றது. இந்த அணியில் இருந்த 18 காவலா்கள் போட்டியில் பங்கேற்றனா். போட்டியின் இறுதியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ஆம் அணி முதலிடத்தையும், உத்தரகண்ட் காவல் துறை 2-ஆம் இடத்தையும், ஹிமாசல பிரதேச காவல் துறை 3-ஆம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தேசிய பேரிடா் மீட்பு படை தலைமை இயக்குநா் பியூஸ் ஆனந்த் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை இணை அமைச்சா் ஆா்.நித்தியானந்த் ராய் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதில் தமிழக காவல் துறை சாா்பில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி இரா.தினகரன் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றிக் கோப்பை பெற்றாா். பேரிடா் மீட்புப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற போலீஸாரை தமிழக காவல் துறையின் பொறுப்புத் தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com