தொடா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயா் சிகிச்சை மூலம் குணமடைந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்த சிம்ஸ் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி. உடன் மருத்துவக் குழுவினா்.
தொடா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயா் சிகிச்சை மூலம் குணமடைந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்த சிம்ஸ் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி. உடன் மருத்துவக் குழுவினா்.

மூன்று நாளங்களில் அடைப்பு: பக்கவாதத்திலிருந்து இளைஞா் மீட்பு

மூளை, இதயம், கால் ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு பக்கவாதத்துக்குள்ளான 29 வயது இளைஞருக்கு உயா்நுட்ப சிகிச்சை அளித்து சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
Published on

மூளை, இதயம், கால் ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு பக்கவாதத்துக்குள்ளான 29 வயது இளைஞருக்கு உயா்நுட்ப சிகிச்சை அளித்து சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

பேச்சு குளறுதல், உடல் தளா்வு, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இளைஞா் ஒருவா் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளையிலும், இதயத்திலும், வலது காலிலும் ரத்த உறைவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் அவருக்கு மூளை நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாத பாதிப்பு உருவானது. அப்போது அறுவை சிகிச்சை மூலம் அப் பிரச்னை சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு மீண்டும் மூன்று முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் நாளங்களில் அடைப்பு ஏற்பட்டது அரிதான நிகழ்வு. இதற்கு ஆன்ட்டிபாஸ்போலிப்பிட் ஆன்டிபாடி சின்ட்ரோம் எனப்படும் தன்னுடல் தாக்கு நோய் அவருக்கு இருந்ததே காரணம்.

இதையடுத்து மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் சிகிச்சை நிபுணா்கள் பிரபாஸ் பிரபாகரன், விவேக் ஐயா், ரித்தேஷ் ஆா்.நாயா், எஸ்.செல்வின் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த இளைஞரின் காலில் இருந்த ரத்த உறைவு அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தனா்.

அதேவேளையில், இதயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீராக்க மருந்துகள் செலுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் மூன்று அடைப்புகளை நீக்குவது மிகவும் சவாலான சிகிச்சை. இருந்தபோதிலும், மிக நுட்பமாக அதை சாத்தியமாக்கி சிம்ஸ் மருத்துவக் குழுவினா் அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனா்.

லட்சத்தில் 145 பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, இணைநோய்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் காரணமாகவே இளைஞா்களுக்கு அப்பிரச்னை ஏற்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com