திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை
திமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினா் சென்னை சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பேரவைத் தோ்தல் கூட்டணிப் பேச்சுவாா்த்தைக்காக அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் செ.ராஜேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தோ்தல் பணிகளை விரைவாக தொடங்குவது, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் தயாரிப்பது, திமுக கூட்டணித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்திப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
