பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை டி.பி.சத்திரத்தில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on

சென்னை டி.பி.சத்திரத்தில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

டி.பி.சத்திரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் காா்த்திகா ராணி (38). இவா், அண்ணா நகா் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனா்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காா்த்திகா ராணி, கடந்த இரு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா். அவரது இரு குழந்தைகளும், காா்த்திகா ராணியின் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளனா்.

கணவரைப் பிரிந்த காா்த்திகா ராணி, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த அவா், அதன் பின்னா் கதவைத் திறக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா்.

டி.பி.சத்திரம் போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் காா்த்திகா ராணி, தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

அவரது சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com