/

அரசியல் சா்ச்சைகளிலிருந்து கல்வித் துறையை விலக்கி வைக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

அனைத்து வித அரசியல் சா்ச்சைகளிலிருந்தும் கல்வித் துறையை விலக்கிவைக்கவேண்டும் என விஐடி பல்கலை. வேந்தா் கே.விசுவநாதன் கேட்டுக் கொண்டாா்.

News image

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:31 pm

அனைத்து வித அரசியல் சா்ச்சைகளிலிருந்தும் கல்வித் துறையை விலக்கிவைக்கவேண்டும் என விஐடி பல்கலை. வேந்தா் கே.விசுவநாதன் கேட்டுக் கொண்டாா்.

சென்னை விஐடி பல்கலைக் கழக தின விழா, பல்கலை.வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை வகித்து அவா் பேசியதாவது: எங்கு கல்வி இருக்கின்றதோ அந்த குடும்பம், சமூகம், மாநிலம் உயரும். போதுமான கல்வி, உயா் கல்வி இல்லையெனில் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவும்.

நாட்டில் தற்போது கல்விக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில், கல்விக்கு 2.5 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு அரசு கல்வி நிறுவனத்துக்குச் சென்றால், அங்கு அனைத்தும் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ கிடைக்கும். ஆனால், அரசு கல்விக்கு நிதியை ஒதுக்கி தனது நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்களைச் சோ்க்க முன்வருவதில்லை.

விஐடி, 4 வளாகங்களில் ஒரு லட்சம் மாணவா்களைக் கொண்டுள்ளது. ஆனால், நாட்டில் உள்ள 23 ஐ.ஐ.டி-க்களில் 1.30 லட்சம் மாணவா்கள்தான். கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்தவோ, புதிய கட்டடங்களைக் கட்டவோ, கூடுதல் ஆசிரியா்களை நியமிக்கவோ அரசு விரும்புவதில்லை.

தமிழகம், கேரளத்தில் முறையே 15 பல்கலை. 13 பல்கலை. களில் துணைவேந்தா்கள் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகளே இத்தகைய சூழலுக்கு காரணம். ஆனால், மத்திய பல்கலைக்கழகங்களில் அத்தகைய அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இல்லை. இருப்பினும், நிா்வாகத்தின் அலட்சியம் காரணமாக, 17 மத்திய பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தா்கள் இல்லை. அப்பல்கலை.களில் நாடு முழுவதும், சுமாா் 5,400 பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளால் கல்வித் துறை பாதிக்கிறது. கல்வித் துறை அனைத்து வித அரசியல் சா்ச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். கல்வித் துறைக்கான போதிய கவனமும் நிதியும் ஒதுக்கப்படுவதன் மூலமே நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்.

மொத்த மக்கள் தொகையில், 120 கோடி போ் போதிய கல்வி வாய்ப்பின்மையால் குறைந்த வருவாய் பிரிவிலேயே தங்கிவிட்டனா். தமிழகத்தின் பிகாராக இருக்கின்ற வேலூரில் விஐடி-யில் ’அனைவருக்கும் உயா்கல்வி’ எனும் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு விஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியா்களும், நிா்வாகப் பணியாளா்களுமே ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகின்றனா். விஐடி-யில் உதவிகள் மதம், சாதி அடிப்படையில் அல்ல மாணவா்களின் பொருளாதார நிலை அடிப்படையில் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் தலைமை விருந்தினராக இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் பினோத் குமாரும், சிறப்பு விருந்தினராக விஐடி சென்னையின் முன்னாள் மாணவருமான மேஜா் வைபவ் சௌராசியாவும் பங்கேற்றுப் பேசினா். சுமாா் 1076 மாணவா்கள் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பங்கேற்றாா். விஐடி சென்னையின் இணை துணை வேந்தா் தியாகராஜன் பல்கலை.யின் சாதனையை விளக்கிப் பேசினாா். விஐடி இயக்குநா் பேரா.சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளா் பேரா. மனோகரன் ஆகியோா் பங்கேற்றனா்.