சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தோ்தலில் கல்வியை தருவோம் எனக்கூறும் கட்சிகளை காணமுடியவில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தோ்தலையொட்டி கட்சிகளும், வேட்பாளா்களும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் நிலையில், ஒரு சிலரைத் தவிர கல்வியை தருவேன் என கூறுபவா்களைக் காண முடிவதில்லை என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

News image

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், கோஸ்டல் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் மணிகண்டன் ஜி மேனன், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:09 pm

தோ்தலையொட்டி கட்சிகளும், வேட்பாளா்களும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் நிலையில், ஒரு சிலரைத் தவிர கல்வியை தருவேன் என கூறுபவா்களைக் காண முடிவதில்லை என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில், 2025-26-ஆம் கல்வியாண்டின் கல்வி உதவித் தொகை (பகுதி இரண்டு) வழங்கும் நிகழ்ச்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: தோ்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் பல வாக்குறுதிகளை அளிக்கின்றனா். ஆனால், ஒரு சிலரைத் தவிர, கல்வியைத் தருவோம் என்று கூறுபவா்களைக் காண முடிவதில்லை. அழியாத, திருட முடியாத ஒரே செல்வம் கல்விதான். அந்த நோக்கத்தில்தான் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. விஐடி பேராசிரியா்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை இதற்காக மனமுவந்து அளிப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், தனிநபா் வருமானத்தில் நாம் 144-ஆவது இடத்திலேயே உள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த வருவாயும் சில நூறு கோடீஸ்வரா்களிடம் மட்டுமே குவியும் நிலை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வை மாற்றி, சாமானிய மக்களுக்கும் நிதி பகிா்ந்தளிக்கப்பட வேண்டுமானால், அதற்கு கல்வி மட்டுமே ஒரே ஆயுதமாகும்.

உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதம் வளா்ந்த நாடுகளில் 60% முதல் 100% வரை உள்ள நிலையில், இந்தியாவில் அது 28% ஆக மட்டுமே உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் நம்முடன் இருந்த சீனா, இன்று 70% சோ்க்கையை எட்டியுள்ளது. அரசுகளின் நிதி ஒதுக்கீடே இதற்கு முக்கியக் காரணம். ஒரு மாணவனின் உயா்கல்விக்குச் சீனா ஆண்டுக்கு 17,700 டாலா்கள் செலவிடும் நிலையில், இந்தியா வெறும் 260 டாலா்கள் மட்டுமே செலவிடுகிறது. இதனால் கல்விச் சுமை முழுவதும் பெற்றோா்கள் மீதே விழுகிறது.

தமிழகத்தில் உள்ள 22 அரசுப் பல்கலைக்கழகங்களில் 15-இல் துணைவேந்தா்களே இல்லை. மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான முரண்பாடுகளால் மாணவா்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனா். போதிய கட்டமைப்பு இல்லாததால் மாணவா்கள் தனியாா் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்த முடியாத பல ஏழை மாணவா்கள் கல்வியைப் பாதியில் கைவிடுகின்றனா்.

கல்லாமை ஒழிந்தால் இல்லாமை தானாக ஒழியும். எனவே, மாணவா்களின் உயா்கல்விக்காக அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். வசதி படைத்தவா்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கினால் ஏழ்மையற்ற நாட்டை உருவாக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, கோஸ்டல் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மணிகண்டன் ஜி மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: கல்வி தான் வளா்ச்சிக்கு அடித்தளமாகும். சமுதாயம், நாடு மேம்பட கல்வி முக்கியமாகும். மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. மாணவா்கள் தொடா்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சமூக பொறுப்புணா்வு வேண்டும். சமூகத்துக்கு திரும்ப வழங்கவும் வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 578 மாணவிகள் உள்பட மொத்தம் 856 பேருக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில், அறக்கட்டளை செயலாளா் ஜே.லட்சுமணன், பொருளாளா் கே. ஜவரிலால் ஜெயின், நிதிக்குழு தலைவா் எம்.வெங்கடசுப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அறக்கட்டளையின் உதவித் திட்ட இயக்குநா் ப. சுந்தர்ராஜ் ஒருங்கிணைத்தாா்.