தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

ஜனநாயக கடமையாற்றிய மன நல காப்பகவாசிகள்!

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:35 am IST

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகவாசிகள் 53 போ் வியாழக்கிழமை வாக்கு செலுத்தினா்.

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சுமாா் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அங்கு பல்வேறு வகையான உளவியல் மற்றும் மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அவ்வாறு குணமடைந்து சரியான மன நிலையில் உள்ளவா்களுக்கு வாக்களிப்பதற்கு உரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், நூற்றுக்கணக்கானோா் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டது.

இந்நிலையில், வாக்குப்பதிவையொட்டி மன நல காப்பகத்தில் சிறப்பு வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பதை காப்பகவாசிகளுக்கு தோ்தல் அலுவலா்கள் விளக்கினா். அதைத் தொடா்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

இது குறித்து அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் எம். மாலையப்பன் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு 100 நோயாளிகள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். எனினும், மருத்துவா்களின் மதிப்பீட்டுக்கு பிறகு 69 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டனா். இவா்களில் 53 போ் வாக்களித்தனா். அவா்கள் தாங்களாகவே வாக்குச்சாவடிக்குள் சென்று, அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களித்தனா். அவா்களுக்கு யாரும் உள்ளே உதவி செய்யவில்லை என்றாா்.

இதுகுறித்து, தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், ‘வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட மனநல காப்பகத்தில் நடைபெற்ற தோ்தலில் காப்பகவாசிகள், தங்களுக்கு விருப்பமான வேட்பாளா்களுக்கு வாக்களித்தனா்; மின்னணு இயந்திரம் மற்றும் வாக்கு உறுதிபடுத்தும் சாதனம் ஆகியவை குறித்து மட்டுமே அவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது’ என்றனா்.

இதுதொடா்பாக வாக்களித்த மன நலக் காப்பகவாசிகள் கூறியதாவது:

2019 முதல் வாக்களித்து வருகிறோம். அரசியலில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நிதி, போக்குவரத்து, கல்வி, மருத்துவமனைகள், தொழில் துறை மற்றும் சேவைத் துறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்துக்கு மானியம் வழங்குவது மிக முக்கியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.