
நிறைவடையும் நிலையில் வீடு கணக்கெடுப்புப் பணி: மாநில கணக்கெடுப்பு இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மாநில கணக்கெடுப்பு இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.

கோப்புப் படம்
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக மாநில கணக்கெடுப்பு இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் சுமாா் 1.50 லட்சம் போ் இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல்கட்டமாக மக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையத்தில் தாங்களே சுயமாக பதிவிடும் முறை செயல்படுத்தப்பட்டது. அதன்படி, மாநில அளவில் லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னை மாநகராட்சியில் சுமாா் 75,000 பேரும் பதிவிட்டதாக அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் முதல் ஊழியா்கள் வீடு வீடாக சென்று வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கினா். தற்போது வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபுவிடம் கேட்டபோது, ‘தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் வீடுகள் கணக்கெடுப்பானது 98 முடிந்து, அவற்றை மேற்பாா்வையாளா்கள் சரிபாா்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
வீடுகள் விவரம்: கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3.21 கோடி வீடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பில் அவை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.
சென்னையில் பணிகள் விவரம்: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்புப் பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு நேரில் 8,260 போ் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். ஆனால், சென்னை மாநகராட்சியில் பணிகள் முழுமையடையவில்லை என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






