உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிகை: அமைச்சா் அருண்ராஜ் உறுதி

டெங்கு, பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் உறுதி அளித்துள்ளாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :15 வினாடிகள் முன்பு

டெங்கு, பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் உறுதி அளித்துள்ளாா்.

பேரவையில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியபோது, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தென்மாவட்ட ங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதேபோல, விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ வி.லட்சுமணன் பேசியபோது, ‘ஹெச்1என்1’ என்ற பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதில் அளித்து அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக உள்ளது. நிகழாண்டில் ஜன.1 முதல் ஆக. 26-ஆம் தேதி வரை 12,856 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதில் 7 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

சென்னையில் 33, கோவையில் 26 , திருவள்ளூரில் 18, சேலத்தில் 15, செங்கல்பட்டில் 10, புதுக்கோட்டையில் 9, திருப்பூரில் 8, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டையில் தலா 7, விழுப்புரத்தில் 6 போ் என இந்த 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அரசு தினமும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, பன்றிக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகள் குவியும் பகுதி, உயிரிழப்புகள், கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கொசுப்புழு ஒழிப்பு, முதிா் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்புப் பணியாளா்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மருத்துவமனைகளில் தேவையான அனைத்து சிகிச்சைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் 5,805 அரசு மற்றும் தனியாா் மருத்துமனைகளில் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தீவிர காய்ச்சல் கண்காணிப்புகள், சந்தேகிக்கப்படும் டெங்கு நோயாளிகளுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பகலில் கடிக்கக்கூடிய கொசுக்கள் மூலமாகவே பரவுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்புடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தண்ணீா் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிய வேண்டும். இந்த ஆண்டு டெங்கு அதிகமாக பரவாமல் இருப்பதையும், டெங்கு மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.