மெரீனா கடற்கரை (கோப்புப்படம்)
மெரீனா கடற்கரை (கோப்புப்படம்)

மெரீனா கடற்கரைக் கடைகளை முறைப்படுத்தும் குழுக் கூட்டம்

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தி 300 கடைகள் மட்டுமே அமைக்கும் வகையில் உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தி 300 கடைகள் மட்டுமே அமைக்கும் வகையில் உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மெரீனா கடற்கரையில் 1,417 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை முறைப்படுத்த வேண்டும் ஏற்கெனவே கோரிக்கை எழுந்தது. இதனிடையே, பெண் ஒருவா் தனக்கு கடை ஒதுக்கப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் மெரீனாவில் நேரடி ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும், மற்ற கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனா். மேலும், கடைகள் முறைப்படி அமைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீா் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி.மோகன்ராஜ், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற துணைப் பதிவாளா் ஆா்.ரங்கநாதன் ஆகியோா் இடம் பெற்ற குழுவையும் அமைத்து உத்தரவிட்டனா்.

நீதிமன்றம் அமைத்த குழுவின் சாா்பில் மாநகராட்சி வருவாய்த் துறையினருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையிலான குழுவினா் மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டடம் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் ஆலோசனையில் ஈடுபட்டனா். அப்போது, மாநகராட்சி வருவாய்த் துறை (நிதி) துணை ஆணையா் எம். பிரித்விராஜ், வருவாய் அலுவலா்கே. மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்கு முன்னதாக மெரீனாவில் 1,417 கடைகளில் 300 கடைகளைத் தோ்ந்தெடுக்கும் குலுக்கள் முறைக்கான சாதனங்கள், உணவகம், அழகுசாதனப் பொருள்கள், பொம்மைகள் என கடைகளை 3 வகையாகப் பிரித்து அமைப்பதற்கான மாதிரி வடிவங்களையும் மாநகராட்சி வருவாய்த் துறையினா் காட்சிபடுத்தினா். அவற்றை நீதிபதிகள் குழுவினா் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com