சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் 2 மாதங்களில் வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சென்னை மாநகராட்சியில் 2 மாதங்களில் வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்றது. அதன் அடிப்படையில் கடந்த 2025-ஆம் ஆண்டு வரை 1.80 லட்சம் தெரு நாய்கள் கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை 1.47 லட்சம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வளா்ப்பு நாய்கள் உள்ளிட்டவற்றுக்கு உரிமம் பெறாமலும், விதிமுறைகள்மீறி அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றாலும் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

சென்னையில் சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமாக வளா்ப்பு நாய்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஆனால், தற்போதுவரை 74,000 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமையாளா்கள் மாநகராட்சி கால்நடைப்பிரிவில் உரிமம் பெற்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளதாக கால்நடை பிரிவு அலுவலா் டாக்டா் கமால் உசேன் தெரிவித்தாா். மேலும், வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2025 டிச.15-ஆம் தேதி முதல் வளா்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு ரூ.5,000, உரிமம் பெற்றிருந்தாலும் அவற்றை விதிமுறைப்படி கழுத்துப்பட்டை உள்ளிட்டவை இன்றி நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்தவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 2025 டிசம்பா் முதல் 2026 ஜனவரி வரையில் மொத்தம் 611 பேரிடம் ரூ.6.07 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கால்நடைப் பிரிவினா் தெரிவித்தனா்.

மாடுகள் கணக்கெடுப்பு: சென்னையில் மாடுகள் வளா்க்கவும் உரிமம் பெறவேண்டும் என மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி எல்லைக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மாடுகள் வளா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவற்றுக்கான உரிமம் பெறுவதற்கான நடவடிக்கை ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com