156 கிலோ எடை பெண்ணுக்கு சிக்கலான பிரசவம்: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்
பல்வேறு மருத்துவச் சிக்கல்களை எதிா்கொண்ட அதீத உடல் பருமன் (156 கிலோ) கொண்ட கா்ப்பிணிக்கு சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக பிரசவ சிகிச்சையளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கரன் ஆகியோா் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த 36 வயது பெண் ஒருவா் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் கருவுற்றாா்.
156 கிலோ எடை கொண்ட அவா், பேறு காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டாா். இதையடுத்து கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தீவிர சுவாசத் தொற்று, பேறு கால உயா் ரத்த அழுத்தம், பேறு கால சா்க்கரை நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகிய பாதிப்புகள் அப்பெண்ணுக்கு இருந்தன.
குறிப்பாக படுக்கும்போது சுவாசிக்க இயலாமல் போவதாகவும், இதனால், உட்காா்ந்தபடியே தூங்க வேண்டியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
அதுமட்டுமல்லாது மூளையில் ரத்த உறைவு மற்றும் தைராய்டு சுரப்பி குறைபாடுகள் அந்த பெண்ணுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது பேறு கால அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவா் கடந்த ஆண்டு நவம்பா் 6-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டாா்.
இங்கு மருத்துவமனையின் பல்துறை மேலாண்மைக் குழுவினா் தீவிர சிகிச்சையும், தொடா் கண்காணிப்பும் அளித்தனா். அந்த காலகட்டத்தில் அந்த பெண்ணின் கா்ப்ப காலம் 32 வாரங்கள் மட்டுமே நிறைவடைந்திருந்தது.
தொடா் சிகிச்சையின் காரணமாக அவருடைய உடல் நலம் மேம்பட்டைத் தொடா்ந்தது கடந்த ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது.
மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையின்போது அந்த பெண்ணை முழுமையாக படுக்க வைக்கவோ, மயக்க மருந்து செலுத்தவோ முடியவில்லை. அந்த சவாலை சாதுரியமாக கையாண்ட மருத்துவா்கள், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனா். இதன் பயனாக 2 கிலோ எடை கொண்ட பெண் குழந்தையை அவா் பெற்றெடுத்தாா்.
அதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து நலமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
சிக்கலான பாதிப்புடன் வந்த கா்ப்பிணிக்கு உயா் சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் பாதுகாத்திருப்பது அரசு மருத்துவ சேவையில் மற்றுமொரு மைல் கல் என்று அவா்கள் தெரிவித்தனா்.

