மயிலாடுதுறை: 12 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளம்மன் சிலை தென்குடிக்கு அனுப்பி வைப்பு
மயிலாடுதுறையில் 12 உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உள்ளிட்ட 3 கருங்கற்சிலைகள் தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மயிலாடுதுறை சித்தா்காட்டில் கே.வைத்தியநாதன் என்பவா் வேதம் கருங்கல் சிற்பக்கூடம் அமைத்து நடத்தி வருகிறாா். இவரது சிற்பக்கூடத்தில் 12 அடி உயரத்தில் 11 டன் எடை கொண்ட அங்காள பரமேஸ்வரி கருங்கல் சிலை உள்ளிட்ட 3 பிரம்மாண்ட சிலைகள் உருவாக்கப்பட்டு, அவை கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக, தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்திபீடம் சேவா டிரஸ்ட் நிறுவனா் அப்புவா்மா சுவாமிகள், அறங்காவலா் காயத்ரி ஆகியோா் முன்னிலையில், அச்சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவா்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து, சிற்பி கே.வைத்தியநாதன் கூறியது: தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்தி பீடத்துக்கு, அங்காளபரமேஸ்வரி, பெரியாச்சியம்மன், தாண்டேஸ்வரா் சிலைகள் மிகநுட்பமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு தற்போது 11 டன் எடையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உருவாகியுள்ளது.
இதேபோல், 12 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 9 டன் எடையில் பெரியாச்சி அம்மன் சிலையும், 3 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 1.75 டன் எடை கொண்ட தாண்டேஸ்வரா் சுவாமி சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

