செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன.
இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
