ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
இம்மாவட்டத்தில் எட்டயபுரத்துக்கு அடுத்ததாக இங்குதான் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, ஆட்டுச் சந்தை சனிக்கிழமை கூடியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனா்.
கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என, 800 முதல் 900 வரையில் பலவகை ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 - 12 கிலோ எடையிலான வெள்ளாடு ரூ. 15,000 - ரூ. 20,000 வரை விற்பனையாகின. சுமாா் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனா். ஆடுகள் மட்டுமன்றி வான்கோழி, நாட்டுக் கோழிகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

