கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் கடந்த ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்தன: காவல் துறை தகவல்

சென்னையில் கடந்த ஆண்டில் (2025) கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறைந்திருந்திருந்தன என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Published on

சென்னையில் கடந்த ஆண்டில் (2025) கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறைந்திருந்திருந்தன என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் கடந்த 2025-ஆம் ஆண்டு கொலை, வழிப்பறி,திருட்டு, கைப்பேசி பறிப்பு, வாகன திருட்டு ஆகிய வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு 105 கொலை வழக்குகளும், 2024-ஆம் ஆண்டு 105 கொலை வழக்குகளும் பதிவாகின. ஆனால் 2025-ஆம் ஆண்டு, 93 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது.

இதேபோல 2023-ஆம் ஆண்டில் 325 வழிப்பறி வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 256 வழிப்பறி வழக்குகளும் பதிவாகின. 2025-ஆம் ஆண்டில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளினால், 180 வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது.

மேலும் 2023-ஆம் ஆண்டில் 424 தங்கச் சங்கிலி, கைப்பேசி பறிப்பு வழக்குகளும், 2024 -ஆம் ஆண்டில் 310 தங்கச் சங்கிலி, கைப்பேசி பறிப்பு வழக்குகளும் பதிவாகின. இந்த வகை குற்ற வழக்குகள் 2025-ஆம் ஆண்டு குறைந்து 206 வழக்குகளே பதிவாகியுள்ளன.

குண்டா் சட்டத்தில் 1,092 போ் கைது: 2023-ஆம் ஆண்டில் 1,750 வாகன திருட்டு வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 1,486 பதிவாகின. இந்த வகை குற்றங்கள் குறைந்து 2025-ஆம் ஆண்டு 1,092 வழக்குகளே பதிவாகியுள்ளன. சென்னையில் தொடா் குற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த 2023-ஆம் ஆண்டு 714 பேரும், 2024-ஆம் ஆண்டு 1,302 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். 2025-ஆம் ஆண்டு 1,092 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் கைதானவா்கள், பிணையில் வெளியே வந்த பின்னரும் கண்காணிக்கப்படுகிறாா்கள். இவா்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் மிரட்டல், தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு ஆண்டுக்கான உத்தரவாத பத்திரம் பெறப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் சிக்கிய 66 பேருக்கு கடந்தாண்டு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டது.

ரூ.459 கோடி சொத்துகள் மீட்பு: சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் 661 வழக்குகள் பதியப்பட்டு, 601 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சுமாா் ரூ.886,53,18,744 மதிப்புள்ள சொத்துகள் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமாா் ரூ.459,74,69,167 மதிப்புள்ள அசையா சொத்துகள் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதியப்பட்ட மொத்த வழக்குகளில், 410 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 747 போ் கைது செய்யப்பட்டனா்.

அத்துடன் மத்திய குற்றப்பிரிவில் பொதுமக்கள் அளித்த 6,175 மனுக்களில் 5,474 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சைபா் குற்றங்கள் தொடா்பாக 778 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.34.74 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com