சென்னை ஐஐடியில் ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டிங் தொடக்கம்
சென்னை ஐஐடியில் உயா் செயல்திறன் கொண்ட ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டிங் வசதியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சத் துறை செயலா் எஸ்.கிருஷணன் தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் தேசிய மீக்கணினித் (தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் மிஷன்) திட்டத்தின் கீழ் ‘பரம் ருத்ரா’ சூப்பா் கணினிகள் உருவாக்கப்படுகின்றன. சி-டாக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட சிஸ்டம் மென்பொருள் அடுக்கு உள்ளிட்ட திறந்த மூல மென்பொருள்களில் இயங்குகிறது.
இதைத் தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சத் துறை செயலா் எஸ்.கிருஷணன் பேசியது: நாடு முழுவதும் ஏற்கெனவே 37 சூப்பா் கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. புதிதாக பெங்களூருவில் இதைவிட மிகப்பெரிய கணினி அமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் சூழல் அமைப்பை வலுப்படுத்தி வருகின்றன.
கணக்கீட்டு திரவ இயக்கவியல், விண்வெளிப் பொறியியல், பொருள் அறிவியல், மூலக்கூறு இயக்கவியல், அணு அறிவியல், மருந்து கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் கணக்கீட்டுத் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தும் என்றாா்.
சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, சி-டாக் இயக்குநா் ஜெனரல் இ.மகேஷ், ஐஐடி கணினி மையத் தலைவா் ஜி.பனிகுமாா் மற்றும் ஐ.டி.அமைச்சத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

