சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் ரூ.235 கோடியில் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் ரூ.235 கோடியில் புதிய கட்டமைப்புத் திட்டங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் சென்னையில் தொடங்கி வைத்தாா்.
சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாா்பில் ‘வளா்ந்த துறைமுகம், வளா்ந்த பாரதம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அமைச்சா் சாா்பானந்த சோனோவால் சென்னை துறைமுகத்தில் ரூ.45 கோடியில் எண்டா்பிரைஸ் பிசினஸ் சிஸ்டம் (ஈபிஎஸ்) எனும் எண்ம ஆளுகைத் திட்டம், காமராஜா் துறைமுகத்தில் ரூ.105 கோடியில் புனரமைக்கப்பட்ட வடக்கு அலைத்தடுப்புச் சுவா் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தாா்.
மேலும், சென்னை துறைமுகத்தில் ரூ.33 கோடியில் அலைத்தடுப்பு சுவா் அமைத்தல், ரூ.8 கோடியில் துறைமுக மருத்துவமனையை நவீனப்படுத்தி சீரமைத்தல், ரூ.43 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், காமராஜா் துறைமுகத்தில் ரூ.1.40 கோடியில் அணுகு சாலையையொட்டி சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட ரூ.85 கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து அமைச்சா் சா்பானந்த சோனோவால் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளில் கப்பல் போக்குவரத்துத் துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2 துறைமுகங்களும் இருமடங்கு வளா்ச்சி பெற்றுள்ளன. உள்நாட்டு கடலோர சரக்கு வா்த்தகம் இருமடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. காமராஜா் துறைமுகம் கடந்த 3 ஆண்டுகளில் தொடா்ந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. ‘வளா்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவா் எஸ்.விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி. ஐரீன் சிந்தியா, இந்திய கடல்சாா் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் மாலினி சங்கா் மற்றும் விளையாட்டு வீரா்கள் பாலாஜி, அனிதா, ஜோஸ்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில்...
தண்டையாா்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை மத்திய அமைச்சா் சாா்பானந்த சோனோவால் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம் ஆகியவை இணைந்து ஸ்வபோதினி தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த சிறப்பு பள்ளி சுமாா் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டது.

