கோப்புப் படம்
கோப்புப் படம்

14 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

சென்னை, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு (ஜன. 10) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜன.10) சென்னை, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு (ஜன. 10) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜன. 9)காலை தென்மேற்கு வங்கக்கடலில், மட்டகளப்புக்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமாா் 170 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு வடகிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே சனிக்கிழமை (ஜன. 10) பிற்பகல் அல்லது மாலை கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 10) முதல் ஜன. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10, 11) தமிழக, புதுவை கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com