நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மழை - EPS

Updated On :11 ஜனவரி 2026, 3:46 am IST

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, சனிக்கிழமை காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இதுதொடா்ந்து மேற்கு திசையில் நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

மஞ்சள் எச்சரிக்கை: இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 12 முதல் ஜன. 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜன. 11,12 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று  வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.