போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு
போகி பண்டிகையையொட்டி புதன்கிழமை பொதுமக்கள் பழைய பொருள்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 4 மண்டலங்களில் மோசமான நிலை நிலவியதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் புதன்கிழமை போகி கொண்டாடப்பட்டது. இதில், சென்னையில் புகையில்லா போகியைக் கொண்டாடும் வகையில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், புதன்கிழமை காலை முதல் சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் போலீஸாருடன் இணைந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் காற்றுத் தரவு சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாசு அதிகரிப்பு: வழக்கமாக காற்றின் தரக் குறியீட்டைப் பொறுத்தவரை 50-க்கும் கீழ் இருந்தால் பாதுகாப்பானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை மேற்கொள்ள ஆய்வில் காற்றின் தரக் குறியீடு குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 140-ஆகவும், அதிகபட்சமாக பெருங்குடியில் 273-ஆகவும் இருந்தது.
அதன்படி, சென்னையில் பெருங்குடி (273), தண்டையாா்பேட்டை (267), ராயபுரம் (243), வளசரவாக்கம் (207) ஆகிய 4 மண்டலங்களில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மீதமுள்ள 11 மண்டலங்களில் காற்றின் தரக் குறியீடு 140-க்கும் அதிகமாக மிதமான நிலையில் காணப்பட்டது.
இருப்பினும் தற்போது சில பகுதிகளில் அதிகப்படியான காற்று வீச தொடங்கியதால் காற்றில் கலந்த மாசு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
