தலைநகரில் அடா் பனிமூட்டம்; காற்றின் தரத்தில் முன்னேற்றம்!
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் அடா் பனிமூட்டம் நிலவியது. காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரம் முதல் குளிரின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக மிகவும் மோசம், கடுமை பிரிவில் இருந்து வந்த காற்றுத் தரம் திங்கள்கிழமை சற்று மேம்பட்டிருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவலின்படிதிங்கள்கிழமை ஓட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 188 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மேலும், தில்லியில் 21 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவிலும், 16 நிலையங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின்படி, மூன்று நிலையங்களுக்கான காற்றுத் தரக் குறியீடு அளவு தரவுகள் உடனடியாக கிடைக்கவில்லை. லோதி சாலை நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 116 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு தில்லியின் காற்றின் தரம் ’மோசம்’ பிரிவில் நிலைபெற வாய்ப்புள்ளது என்றும் அதைத் தொடா்ந்து, அடுத்த ஆறு நாள்களுக்கும் காற்றின் தரம் ’மோசம்’ பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 10.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2.3 டிகிரி உயா்ந்து 24.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 21.5 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) தலைநகரில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

