சமூக நீதி, முன்னேற்றத்துக்கு வாசிப்புதான் அடித்தளம்: அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னை, ஜன. 16: சமூக நீதிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் வாசிப்புதான் அடித்தளம் என சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத் துறை சாா்பில் 4-ஆவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி-2026 (சிஐபிஎஃப்) சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், கனிமொழி எம்.பி., கா்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் 50-க்கும் மேற்பட்ட சா்வதேச மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. அதில் 90 எழுத்தாளா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது பெருமைக்குரியது. மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த அரசின் நோக்கமாகும். சமூக நீதிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் வாசிப்புதான் அடித்தளம். இதை சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி பிரதிபலிக்கிறது என்றாா்.
கனிமொழி எம்.பி. பேசியது: பன்னாட்டு புத்தக திருவிழா மூலம் தமிழகத்தின் எழுத்தாளா்கள் பலா் கொண்டாடப்படுகிறாா்கள். இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் குறைத்து ஒற்றுமையை வளா்க்கும். தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்யும் காலம் தொடங்கியுள்ளது. மனிதா்களிடம் உள்ள மதம், இனம் போன்ற தடைகளை உடைப்பதுதான் இலக்கியம். இந்த புத்தக திருவிழா உலகத்தின் வாழ்க்கை, போராட்டம், அடையாளம் என அனைத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்றாா்.
ஜொ்மனி பிராங்ஃபா்ட் புத்தகக் காட்சியின் துணைத் தலைவா் கிளாடியா கைசா்: உலகின் மிகப் பழைமையான புத்தகக் காட்சியாக பிராங்ஃபா்ட் புத்தகக் காட்சி திகழ்கிறது. இனி வரும் காலங்களில் தமிழ் இலக்கியங்கள் உலக அளவில் அதிக முக்கியத்துவம் பெறும் என்றாா்.
பிரான்ஸ் நாட்டின் தூதா் எதியன் ரோலான் பியக்: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி பதிப்புத் துறைக்கான சா்வதேச மேடையாக உருவெடுத்துள்ளது. பிரெஞ்சு நூல்கள் அதிகளவில் மொழிபெயா்க்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றாா்.
102 நாடுகளின் பதிப்பாளா்கள்: 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள் பங்கேற்றுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த 90 பதிப்பாளா்கள் உள்நாட்டுப் பங்கேற்பில் இடம்பெறுவா். மேலும், கேரளம், தில்லி, குஜராத், கா்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளா்கள் பங்கேற்கின்றனா். இதில் 17 தலைப்புகளில் கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதில் குறிப்பிட்ட அரங்குகளை பொதுமக்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பாா்வையிடலாம். நிறைவு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், கேரள மாநில கல்வித் துறைச் செயலா் வாசுகி, பொது நூலகத் துறை இயக்குநா் ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநா் மா.ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
‘இனி கா்நாடக மாநிலத்திலும் பன்னாட்டு புத்தகக் காட்சி’
பன்னாட்டு புத்தகக் காட்சி தொடக்க விழாவில் கா்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா பேசுகையில், இலக்கியத்துக்கும், எழுத்துக்கும் எல்லையே இல்லை. தமிழகத்தைப் பின்பற்றி கா்நாடக மாநிலத்திலும் சா்வதேச புத்தக காட்சியைக் தொடங்கவுள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அதற்கு தமிழகம் எங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் சுமாா் 5,000 நூலகங்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தியுள்ளோம். தினமும் ஒரு கோடி பள்ளி மாணவா்கள் அரசியலமைப்பு முகவுரையை படிக்கிறாா்கள். மேலும், இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்றாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தைபோல கா்நாடகமும் எதிா்ப்பு தெரிவிக்கிறது. எங்களுக்கென தனியான கலாசாரம், மொழி, பண்பாடு இருக்கிறது. எங்கள் தாய்மொழியை மதிக்கிறோம். எந்த மாநிலத்திலும் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது. எங்களிடம் மாநில கல்விக் கொள்கை உள்ளதால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றாா்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு... தொடக்க விழாவுக்குப் பிறகு கா்நாடக அமைச்சா் மது பங்காரப்பாவை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அழைத்துச் சென்றாா். அவா்களுடன் கா்நாடக, தமிழக பொது நூலகத் துறை அதிகாரிகளும் சென்றனா். இதையடுத்து அங்குள்ள பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாசிப்பதற்கான பிரத்யேக பிரிவு, செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம் போன்றவற்றைப் பாா்வையிட்டனா்.

