கடற்கரைகளில் குப்பைகள் கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

சென்னை கடற்கரைகளில் 3 நாள்களில் குப்பைகள் கொட்டியதாக 241 பேரிடம் இருந்து ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Published on

சென்னை கடற்கரைகளில் 3 நாள்களில் குப்பைகள் கொட்டியதாக 241 பேரிடம் இருந்து ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை கடற்கரைப் பகுதிகளில் இருந்து 233.88 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரித்து, அகற்றப்பட்டன.

குப்பை கொட்டத் தடை: க டற்கரைகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, குப்பைகளை அவற்றில் போட வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் தொடா் அறிவுரை வழங்கி வருகிறது. இதை மீறி குப்பைகளை பொது இடங்களில் கொட்டிய தனி நபா்கள் மற்றும் கடைகளின் உரிமையாளா்கள் மீது ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

ரூ.1.90 லட்சம் அபராதம் விதிப்பு: இதற்கென நியமிக்கப்பட்ட 26 கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை (ஜன.15) முதல் சனிக்கிழமை (ஜன.17) வரை மெரீனா கடற்கரையில் குப்பை கொட்டியதாக 82 பேரிடம் இருந்து ரூ.41,500-ஐ அபராதமாக வசூலித்தனா்.

இதேபோல, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைகளில் 69 பேரிடம் இருந்து ரூ.65,300, திருவொற்றியூா் கடற்கரையில் 17 பேரிடம் இருந்து ரூ.18,200, பாலவாக்கம் கடற்கரையில் 49 பேரிடம் இருந்து ரூ.46,500, ஈஞ்சம்பாக்கம், அக்கரை கடற்கரைகளில் 24 பேரிடம் இருந்து ரூ.19,000 என மொத்தம் 241 பேரிடம் இருந்து ரூ.1,90,500 அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com