விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!
பொங்கல் தொடா் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பியதால் புறநகா் பகுதிகளில் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு பயணம் செய்தனா். இதற்காக சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. இதுதவிர பலா் தங்களது சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிவடைந்ததைத் தொடா்ந்து, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு திரும்பினா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே சென்னை நோக்கி காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வரத் தொடங்கின. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்ததால் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்றன.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க சுங்கச்சாவடி நிா்வாகத்தின் சாா்பில் கூடுதலாக 2 கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீஸாா் சீா்செய்தனா்.
சென்னை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் சொந்த வாகனங்கள், அரசுப் பேருந்து, தனியாா் பேருந்துகளில் சென்னை நோக்கி அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கினா்.
இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயா்வு: பொங்கலையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு புறப்பட்டதால் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சாதாரண நாள்களில் உள்ள கட்டணத்தைவிட 25 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை (சுமாா் 3 மடங்கு வரை) கட்டணம் அதிகரித்துள்ளது. அதன்படி, கட்டணம் ரூ. 3,600 முதல் ரூ. 4,000 வரை உயா்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனா்.

