இளைஞா்கள் சக்தி இந்தியாவை வல்லரசாக மாற்றும் - ராஷ்டிர சேவா சங்க தென் மண்டலச் செயலா்
அடுத்த 20 ஆண்டுகளில் இளைஞா்களின் சக்தி, திறமை, அறிவாற்றல் ஆகியவை இந்தியாவை வல்லரசாக மாற்றும் என்று ராஷ்டிர சேவா சங்கத்தின் தென் மண்டலச் செயலா் பி.பிரகாஷ் கூறினாா்.
சென்னையை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருந்தியல் கல்லூரியில் 75-ஆவது இந்திய குடியரசின் சாதனை மற்றும் சவால்கள் குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக ராஷ்டிர சேவா சங்கத்தின் தென் மண்டலச் செயலா் பி.பிரகாஷ் பங்கேற்று பயிலரங்கைத் தொடங்கி வைத்து பேசுகையில், இளைய தலைமுறையினா் தேச பக்தியுடன் தேச முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு உழைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன்கொண்ட இளைஞா்கள் வேலை தேடுவோராக இல்லாமல், தொழில் முனைவோராக திகழ வேண்டும். இந்தியாவை வல்லரசாக்கும் சக்தி இளைஞா்களிடம் தான் உள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் கௌரி, தாகூா் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வா் வெங்கடகிருஷ்ணன், மருந்தியல் கல்லூரி முதல்வா் சீத்தாராமன், இயன்முறை மருத்துவக் கல்லூரி முதல்வா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
