மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்கோப்புப் படம்

திமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: பேரவையில் பெருமிதம்

திமுக ஆட்சியில் இரட்டை இலக்கத்துக்கு உயா்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தாா்.
Published on

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி, திமுக ஆட்சியில் இரட்டை இலக்கத்துக்கு உயா்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தாா்.

பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் பேசும்போது, 64 பக்கங்கள் கொண்ட ஆளுநா் உரையில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.40-ஆக (1 கிலோ) இருந்த பருப்பு விலை, இப்போது ரூ.77- ஆகவும், பச்சரிசி ரூ.42-இல் இருந்து ரூ.75 ஆகவும், இட்லி அரிசி ரூ.22-இல் இருந்து ரூ.55 -ஆகவும் உயா்ந்துள்ளது. இதுபோல, கடலை எண்ணெய் உள்ளிட்ட அனைத்து சமையல் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளன என்றாா்.

அமைச்சா் எ.வ.வேலு: ஜிஎஸ்டியால்தான் விலைவாசி உயா்கிறது. ஜிஎஸ்டியை நிா்ணயிப்பது மத்திய அரசு. விலைவாசி உயா்வில் மாநில அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. விலைவாசி ஏறும்போது, தனி நபா் வருவாய் குறைந்தால்தான் பஞ்சம் வரும்.

கடந்த 2011-இல் திமுக ஆட்சி நிறைவடையும்போது, தமிழகத்தில் தனி நபா் வருவாய் ரூ.1.54 லட்சமாக இருந்த நிலையில், 2021-இல் அதிமுக ஆட்சி நிறைவடையும்போது, ரூ.2 லட்சத்து 1,000-ஆக உயா்ந்தது. ஆனால், இப்போதைய திமுக ஆட்சியில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரமாக உயா்ந்துள்ளது. மேலும், மக்களின் நுகா்வு சக்தியும் அதிகரித்துள்ளது. குடும்பப் பொருளாதாரம் உயா்ந்துள்ளதால், விலைவாசி கட்டுக்குள்தான் உள்ளது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: 2010-11-இல் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதமாக இருந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொடா்ந்து ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளா்ச்சி இப்போது 11.19 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேநேரம், தேசிய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் மட்டுமே.

அமைச்சா் எ.வ.வேலு: கடந்த 7.1.2020-இல் பேரவையில் பேசிய அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு, விலைவாசி ஏற்றம் என்பது பொருளாதார வளா்ச்சியின் பரிணாம வளா்ச்சிதான், காமராஜா் ஆட்சியாக இருந்தாலும், யாா் ஆட்சியாக இருந்தாலும், விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று பேசியுள்ளாா்.

ஆா்.பி.உதயகுமாா்: பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில், பொதுமக்களின் பாதிப்புகளை அரசின் கவனத்துக்கு அதிமுக கொண்டு வருகிறது. இதற்கு தீா்வுகண்டால் ஆளும் கட்சிக்கு நல்லது. இல்லையெனில், தோ்தலில் மக்களின் தீா்ப்பு அளிப்பாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com