அதிமுகவை எவராலும் விழுங்க முடியாது: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
அதிமுகவை எவராலும் விழுங்க முடியாது என அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.


அதிமுகவை எவராலும் விழுங்க முடியாது என அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பிரசார பயணத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை பாஜக விழுங்கி விடும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறாா். பிகாரில் நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் ஏற்படும் என்றும் பேசிவருகிறாா். அதிமுகவை எவராலும் விழுங்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஒருவா் திமுகவில் இணைந்துள்ளாா். அதிமுகவில் தனக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று அவா் கூறுகிறாா். திமுகவுடன் சோ்ந்து அதிமுகவை வீழ்த்த நினைத்தாா். அவராக வீழ்ந்து விட்டாா். ஜெயலலிதா அவருக்கு முதல்வா் பதவி கொடுத்தாா். முதல்வராக அமரவைத்த இயக்கம் அதிமுக என்ற நன்றியை மறந்து விட்டாா். எம்ஜிஆரை அழிக்க நினைத்த தீய சக்தியான திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளாா்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கஞ்சா விற்காத இடமே இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்காத நாளே இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?
பெருந்துறை விவசாயிகள் நிறைந்த பகுதி. இந்தப் பகுதி மக்களின் 50 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வந்தேன். அதிமுக ஆட்சியில் 85 சதவீதம் பணிகள் முடிந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை முடக்கினாா்கள். ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. ஒருவழியாக மூன்று ஆண்டுகள் கழித்து ஸ்டிக்கா் ஒட்டி திறந்துவைத்தாா். ஆனாலும், இதில் பல ஏரிகள் விடுபட்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் விடுபட்ட குளம், ஏரிகள் நிரப்பப்படும்.
அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். இன்று ‘ஷிப்ட்’ போட்டு கொடுக்கிறாா்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
பாஜகவுக்கு அதிமுக அடிமை என்கிறாா். திமுகதான் காங்கிரஸுக்கு அடிமை. 2011-இல் ‘ரெய்டு’ காரணமாக திமுகவை அடிமையாக்கி, காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.
திமுக ஆட்சியில் தினந்தோறும் பல தரப்பினா் போராடுகிறாா்கள். தமிழகம் போராட்டக் களமாகி விட்டது. தோ்தலின்போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் போராடுகிறாா்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி திமுக.

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை. எல்லோரையும் ஏமாற்றிவிட்டது திமுக அரசு.
இருசக்கர வாகன திட்டத்தில் பெண்களுக்கு மானியமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தோம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் கொடுக்கப்படும்.
பொங்கலுக்கு ரூ.1,000, தீபாவளிக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். முதியோா் உதவித் தொகை ரூ.2 ஆயிரம், வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.2 ஆயிரம், 12ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, வருடம் 3 எரிவாயு உருளை வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்துக்கு ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், பெருந்துறை தொகுதி ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், ராமசாமி, ரவிசந்திரன், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், பூபாலகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் அன்பரசு, மாவட்ட இளைஞரணிச் செயலாளா் அருணாசலம், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் சிவநாதன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பெருந்துறை பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் வகையில் மேடை அமைத்து வைக்கப்பட்டுள்ள எரிவாயு உருளைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...