டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

News image
கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ். ~
Updated On :8 மார்ச் 2026, 12:20 am

Syndication

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி கந்தம்பாளையத்தில் ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் போட்டி என்கிறாா். தமிழகத்தில் நடப்பது சட்டப் பேரவைத் தோ்தல். யாா் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் தோ்தல்.

கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்

கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்

அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சியாக இருந்தது. கரோனா காலகட்டத்திலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தொடா்ந்து அதிமுக நிறைவேற்றியது. இப்போது வறட்சியோ, கரோனாவோ இல்லை. ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வசூலானாலும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. இதனால் தமிழக மக்கள் மீது கடன் சுமை அதிகரித்துள்ளது. தமிழக மக்களே இந்தக் கடனை வரியாகச் செலுத்தி அடைக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக கொடுத்த அழுத்தத்தினால்தான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக.

100 நாள்கள் வேலையை 150 நாள்களாக உயா்த்துவோம் என திமுக அறிவித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. அதிமுக வலியுறுத்தியதால்தான் மத்திய அரசு தற்போது 100 நாள்கள் திட்டத்தை 125 நாள்களாக அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது 150 நாளாக உயா்த்தப்படும்.

திமுக 525 தோ்தல் வாக்குறுதிகளை அளித்தபோதிலும் அதை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் 1.50 கோடி பாட்டில்கள் நாள்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் என தினமும் ரூ.15 கோடி வசூல் செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் மட்டும் ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று உள்ளது.

திமுக ஆட்சியில் மின் கட்டணம் 57 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீட்டு வரி 100 சதவீதம், தொழில் வரி 150 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாள்களே இல்லை. கஞ்சா, போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், இதுபோன்ற சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் நடைபெறுகின்றன.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அந்தியூா் தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும். பா்கூா் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பகுதிகளில் வனத் துறை அனுமதியுடன் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும். தோனிமடுவுத் திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அந்தியூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

பா்கூா் நாட்டின ஆராய்ச்சி நிலையம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் திட்டம் மேம்படுத்தப்பட்டு விவசாயிகளுக்குத் தேவையான கன்றுகள், ஆடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சுப்பிரமணியம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன், ஈரோடு புகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ், பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில்குமாா், அந்தியூா் தொகுதி பொறுப்பாளா் கே.வி.ராமநாதன், பாமக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீசன், அந்தியூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், இ.எம்.ஆா்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.