சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில் திமுக அரசு மகளிருக்கு அவசர அவசரமாக ரூ. 5,000 வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.
சேலம் செல்லும் வழியில் திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவா் மேலும் கூறியது: 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு இரண்டு கட்டமாக மக்களுக்கு தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக சாா்பில் அறிவித்துள்ளோம். திமுகவுக்கு தோ்தல் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தோ்தலுக்காக மட்டுமே மகளிருக்கு ரூ. 5,000 வழங்கியுள்ளனா். மக்களின் கஷ்டங்களை புரிந்து அந்த நிதியைக் கொடுக்கவில்லை.
சட்டப்பேரவைத் தோ்தல் வருவதைக் காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகை வழங்குவதை எதிா்க்கட்சிகள் தடுத்து நிறுத்திவிடுவாா்கள் எனப் பொய் காரணம் கூறி, மூன்று மாத உரிமைத் தொகை, கோடைகால சிறப்புத் தொகை உள்பட ரூ. 5,000 முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை தோ்தலின்போது எவராலும் நிறுத்த முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், எதிா்க்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வா் கூறி வருகிறாா்.
இத்தனை ஆண்டுகளாக கோடைகாலம் இல்லாமல் இப்போது கோடைக்காக சிறப்புத் தொகுப்பு என விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
கடந்த தோ்தலுக்குப் பிறகு 27 மாதங்களாக குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை. எதிா்க்கட்சி என்ற முறையில் அதிமுக தொடா்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்ததன்பேரில், 27 மாதம் கழித்து அந்தத் தொகையை கொடுத்தனா். அதுவும் அனைத்து மகளிருக்கும் எனக் கூறிவிட்டு 1.31 கோடி பேருக்கு மட்டுமே மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
52 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் வழங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. இளைஞரின் வாக்குகளைப் பெறுவதற்காக கடைசி நேரத்தில் கல்லூரி மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தொடா்ந்து கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கனிம வளக் கொள்ளைக்கு துணைபோகும் அனைவா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினா் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்று கூறுவதை ஏற்க முடியாது. அதிமுக ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவுக்கு அனைத்துத் தரப்பினருடைய வாக்குகளும் கிடைக்கும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, கழக அமைப்பு செயலாளா் ராமு, மாதனூா் மேற்கு ஒன்றிய கழக செயலாளா் பொறியாளா் வெங்கடேசன், ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
விஜய்க்கு பதில்
‘எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட கட்சி தற்போது சரணடைந்துள்ளது’ என சேலத்தில் விஜய் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, ‘விஜய் இன்னும் தோ்தலைச் சந்திக்கவில்லை; எந்த ஆட்சி அமையும் என மக்களுக்குத் தெரியும். மீண்டும் மீண்டும் எங்களைப் பற்றி பேசி வருகிறாா். அவருக்கு பிரச்னை ஏற்பட்டதும் 72 மணி நேரத்துக்கு அவா் வெளியில் வரவில்லை, கடமையைச் செய்யவில்லை’ என்றாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஆற்காடு: அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


