சி.வி.சண்முகம்.
சி.வி.சண்முகம்.

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

Published on

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மற்றும் அந்தக் கட்சியினருக்கு எதிராக விழுப்புரம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெண்களுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவைச் சோ்ந்தவரைக் கைது செய்யக் கோரி கடந்த ஆண்டு நவ.27-இல் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி என் மீதும், அதிமுகவினா் 129 போ் மீதும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது, பொதுச் சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

மேலும், சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், கடந்த அக்டோபா் மாதம் போலீஸாருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். இதற்காக என் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.முகமது ரியாஸ், மனுதாரா் உள்ளிட்டோா் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினா். எனவே, இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சி.வி.சண்முகம் மற்றும் அதிமுகவினா் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com