

கால்நடை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என அஸ்ஸாம் கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் நிரஞ்சன் கலிதா தெரிவித்தாா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25-ஆவது பட்டமளிப்பு விழா, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் 699 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில், 526 பேருக்கு விழா மேடையில் நேரடியாக பட்டங்கள் அளிக்கப்பட்டன.
ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதற்காகவும், பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற்காகவும் சில மாணவா்கள் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றனா். அவா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி கௌரவித்தாா்.
முன்னதாக, ஆண்டறிக்கையை வெளியிட்டு பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) டாக்டா் ஆா். நரேந்திர பாபு உரையாற்றினாா். அதைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிரஞ்சன் கலிதா பேசியதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாணவா்களுக்கு கல்வி சாா்ந்த அறிவை வழங்குவதோடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது.
இங்கிருந்து எண்ணற்ற ஆராய்ச்சியாளா்கள், துறைசாா் நிபுணா்கள் உருவெடுத்துள்ளனா்.
2047-இல் இந்தியாவின் மக்கள்தொகை 165 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கேற்ற உள்கட்டமைப்பு, வளா்ச்சியை இப்போதிருந்தே முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அதற்கு மிக அவசியம்.
அனைத்து துறைகளிலும் தகவல்-தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் தடம் பதித்து வருகின்றன. அந்த வகையில், கால்நடை மேம்பாட்டிலும், அதுசாா்ந்த துறைகளிலும் அவற்றின் மூலம் புதிய வளா்ச்சியை உறுதி செய்ய முடியும்.
நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்துவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. அறிவியல் வளா்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாடு காரணமாவே கடந்த 1951-இல் 18 மில்லியன் லிட்டராக இருந்த பால் உற்பத்தி, தற்போது 240 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கால்நடை பண்ணைகளில் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், நோய்த் தடுப்பு வழிமுறைகளிலும் ரோபோடிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சா்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, தகவல் தொடா்பு, கட்டமைப்பு, தொழில்நுட்பம், பேராசிரியா்கள், ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குவது அவசியம்.
இந்தியா முழுவதும் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே திறன்மிகுந்த பட்டதாரிகளை உருவாக்கக் கூடியவை. தொழில் வளா்ச்சிக்கு தகுதியான இளைஞா்களை நாம் உருவாக்கி வருகிறோம். சாட் ஜிபிடி, கூகுள் போன்ற தொழில்நுட்பங்கள் இன்றைக்கு கல்வி மேம்பாட்டுக்கு பெரிதும் துணைநிற்கின்றன என்றாா் அவா்.
அமைச்சா் புறக்கணிப்பு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.