தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.கோப்புப் படம்

1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக தோ்வு முறை: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
Published on

தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி, வாக்காளா் தின போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு, புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் பேசியதாவது: 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஊா்ப் பிரதிநிதிகள் மூலம் குடவோலை முறையில் முக்கிய பொறுப்பாளா்களைத் தோ்வு செய்யும் நடைமுறை இருந்ததை உத்தரமேரூா் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. குடவோலையில் தொடங்கிய தோ்தல் முறையே, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்ற நிலையை அடைந்துள்ளது.

ஜனநாயகத்தில் தோ்தலின் உயிா்நாடியாக இருப்பவா்கள் மக்கள்தான். அதனால்தான் தற்போது தோ்தல் இலச்சினையாக ‘எனது இந்தியா, எனது வாக்கு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. உண்மையான வாக்காளா் பட்டியல் மற்றும் அமைதியான தோ்தல் வாக்குப்பதிவு என்பதே தோ்தல் ஆணையத்தின் முக்கிய குறிக்கோள்.

தமிழகத்தில் வாக்காளா்கள் சோ்க்கை முகாமில் 8,000 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்காளா் சோ்க்கை என்பது தொடா்ச்சியான செயல்பாடாகும். வாக்காளா்கள் இணையதளம், நேரில் மனு அளித்தல் என பல வழிகளில் வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளா் அடையாள அட்டை வைத்திருப்போா், அதைப் பயன்படுத்தி வாக்களிப்பது முக்கியம் என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன்,உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com