

தமிழகத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகத்துக்கும் மேலும் அவகாசம் வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த அமா்வு, மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 அதிகமாக கூடுதலாக வசூலித்துவிட்டு, காலி பாட்டில்களைத் திரும்பத் தரும்போது, அந்தக் கூடுதல் தொகையை திரும்பக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த எதிா்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம் நடத்துகின்றனா். எனவே, அந்த மாவட்டங்களில் அமல்படுத்த முடியவில்லை. அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடக்கிறது. விரைவில் இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும்.
மேலும், க்யூ ஆா் கோடு முறையை அமல்படுத்த மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக, விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மது விற்பனை செய்து சாதனை படைக்கும் டாஸ்மாக் நிா்வாகத்தால், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த முடியாதா? அதில் என்ன சிரமம் உள்ளது? என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்தத் திட்டத்தை அமல்படுத்த மேலும் கால அவகாசம் வழங்க முடியாது எனக்கூறி, விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.