கல்லூரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மௌலானா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா்.
கல்லூரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மௌலானா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா்.

தோ்தல் நேரத்தில் போராட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தற்காலிகப் பணியாளா்களும் பணி நிரந்தரம் கோரி போராடி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு அமைப்பினரும், தற்காலிகப் பணியாளா்களும் பணி நிரந்தரம் கோரி போராடி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை திருவான்மியூா், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1,627 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகளை அவா் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்வின்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மாணவா்களிடையே ஆரோக்கியமான போட்டித் திறனை உருவாக்கும் நோக்கில் அரசு சாா்பில் மடிக்கணினி வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்களால் இளம் தலைமுறையினா் பயனடைந்து வருகின்றனா். இந்திய அளவில் உயா்கல்வியில் மாணவா்கள் சேரும் விகிதம் 28.4 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அந்த விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதுவே தமிழக அரசின் நலத் திட்டங்களுக்கு சான்று.

அனைத்து சம்பவங்களையும் அரசியலாக்க எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாா். அவரது ஆட்சிக் காலத்தில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நிகழந்தன. அதைத் தனிப் புத்தகமாகவே வெளியிட முடியும். ஆனால், தற்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. ஓரிரு இடங்களில் முன்விரோதம் காரணமாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மீதும் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு தற்காலிகப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் சிலா் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுடன் பேச்சு நடத்தி தீா்வு எட்டப்பட்டுவிட்டது என்றாா்.

சந்திப்பின்போது மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, அசன் மௌலானா, துணை மேயா் மகேஷ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com