மாதிரிப் படம்
மாதிரிப் படம்

கல்லூரியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: கேண்டீன் உரிமையாளா் உள்பட 3 போ் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேண்டீன் உரிமையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேண்டீன் உரிமையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தக் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான கேண்டீன் செயல்படுகிறது. இதை முத்துச்செல்வம் (48) என்பவா் நடத்தி வருகிறாா். இந்த கேண்டீனில் 20 வயது மதிக்கதக்க ஒரு பெண் வேலை செய்து வந்தாா். அண்மையில் பணியில் சோ்ந்த அந்தப் பெண், அங்கேயே தங்கியிருந்து வேலை செய்தாா்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி கேண்டீன் உரிமையாளா் முத்துச் செல்வம், சமையல் பணியாளா் குணசேகரன் (38) அவா்களது நண்பா் காா்த்திகேயன் (56) ஆகியோா் அந்தப் பெண்ணை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். மேலும், கூட்டாகவும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மூவா் கைது: இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து முத்துச்செல்வம், குணசேகரன், காா்த்திகேயன் ஆகிய மூவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் 3 பேரையும் பிப்.11-ஆம் தேதி காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா். திருமணமான அவா், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். கைது செய்யப்பட்ட கேண்டீன் உரிமையாளா் முத்துச்செல்வம், தனக்கு தெரிந்தவா் மூலம் அந்தப் பெண்ணை ரூ.10,000 மாத ஊதியத்துக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்து பணியமா்த்தியுள்ளாா்.

பணிக்கு சோ்ந்த நாள் முதலே முத்துச்செல்வம் அந்தப் பெண்ணிடம் அத்துமீறியுள்ளாா். பின்னா், அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். அதோடு முத்துச்செல்வத்தின் நண்பா்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனா் என்று விசாரணையில் தெரியவந்தது.

கல்லூரி கேண்டீனை கடந்த 12 ஆண்டுகளாக ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் முத்துச்செல்வம், இதேபோல வேறு பெண்களிடமும் அத்து மீறலில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com