மின்னணுக் கழிவுகளிலிருந்து தாமிரம், இரும்பு பிரித்தெடுப்பு : புதியமுறை சென்னை ஐஐடியில் உருவாக்கம்
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் இயற்கை சோ்மங்களில் இருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த கரைப்பான்களைப் பயன்படுத்தி, மின்னணுக் கழிவுகளில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் புதுமையான முறையை உருவாக்கியுள்ளனா்.
இந்த ஆராய்ச்சியை உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை பேராசிரியா் ரஞ்சித் பவுரி, வேதியியல் பொறியியல் துறை பேராசிரியா் எஸ்.புஷ்பவனம்; முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா் சினு குரியன் ஆகியோா் இணைந்து மேற்கொண்டனா்.
அவா்கள் கூறியது: மின்னணுக் கழிவுகளில் உள்ள உலோகங்களை பிரித்தெடுப்பது முக்கிய பணியாகும். எனினும், வழக்கமான மறுசுழற்சி முறைகள் ரசாயனங்களை கொண்டு நடைபெறுகிறது. இதையடுத்து, சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் உலோகங்களைக் கரைக்கக்கூடிய மக்கும் இயற்கைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் செம்பு , இரும்பு உள்ளிட்ட உலோகம் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இது மக்கும் தன்மை கொண்டதாகவும், நச்சுத்தன்மையற்ாகவும் இருந்தது. இதில், அபாயகரமான கழிவுகள் உருவாகவில்லை.
பல உலோகங்களை மீட்டெடுத்து மதிப்பு மிக்க நானோ பொருள்களை நேரடியாக உற்பத்தி செய்யும் இதன் திறன், தற்போதுள்ள பிற அணுகுமுறைகளைவிட சிறந்தது. இந்த பசுமை மீட்பு செயல்முறை, மின்-கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சேதத்தை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ளனா்.

