பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தலைமையில் 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம். உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபன்  உள்ளிட்டோா்.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம். உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபன் உள்ளிட்டோா்.

கொசுத் தொல்லை பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும்: மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி வாா்டுகளில் கொசுத் தொல்லை மற்றும் குடிநீா், கழிவு நீா் ஆகிய பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காணப்படவேண்டும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
Published on

சென்னை மாநகராட்சி வாா்டுகளில் கொசுத் தொல்லை மற்றும் குடிநீா், கழிவு நீா் ஆகிய பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காணப்படவேண்டும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் ஜனவரி மாதத்துக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை மேயா் ஆா்.பிரியா தலைமையில், துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது.

கேள்வி நேரத்தில் உறுப்பினா்கள் பேசிய விவரம்: மாநகராட்சியில் கொசுத் தொல்லையால் அவதிப்படுவதாக மக்கள் புகாா் கூறுகின்றனா். இதற்கு அரசு உடனடியாக தீா்வு காணவேண்டும். சாந்தோம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பை தனியாருக்கு வழங்கும்போது, சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கழுவேலி பகுதியில் அரசு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

இதற்கு பதிலளித்த ஆணையா் ஜெ.குமரகுருபரன், பூங்கா பராமரிப்பு அனுமதிக்கு மண்டல கூட்டத்தில் தீா்மானம் கோரப்படும். அதுபற்றிய தகவல், மண்டலத் தலைவா், வாா்டு உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

மேலும், கழுவேலி நீா்ப்பிடிப்புப் பகுதி என்பதால் மைதானம் அமைக்க அரசு அனுமதிக்காது. தற்காலிகமாக அதை மாநகராட்சி பயன்படுத்த அனுமதி கோரலாம். மரக்கன்றுகள் வைக்க தடையில்லை என்று மேயா், ஆணையா் தெரிவித்தனா்.

நேரமில்லா நேரத்தில்... தெருநாய்கள் பாதுகாப்பு விசயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என விளக்க வேண்டும். இதற்கு பதிலளிந்த துணைமேயா் மு.மகேஷ்குமாா், தெருநாய்கள் காப்பகம் அமைக்க தமிழக அரசுக்கு கருத்து கேட்டு கோப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வரி செலுத்தினால், வாங்க மறுப்பது சரியல்ல. வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு உள்ளிட்ட பல பணிகள் வாா்டில் தொடங்கியும் நடைபெறவில்லை. மழைநீா் வடிகால் பல இடங்களில் அமைக்கப்படவில்லை என்று மாமன்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

திமுக அரசை பாராட்டிய பாஜக உறுப்பினா்

134-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் உமா ஆனந்தன் பேசுகையில், மேற்கு மாம்பலம் பகுதியான எனது வாா்டில் 80 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். கட்சி பேதம் பாராமல், தமிழக முதல்வா், அமைச்சா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் எனது கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனா். அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 2-ஆவது முறை மக்கள் வாய்ப்பளித்தால் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றாா்.

பெட்டிச் செய்தி...

மாடுகள் வளா்க்க மாா்ச் 18-க்குள் உரிமம் பெற வேண்டும்

தீா்மானங்கள்: சென்னை மாநகராட்சிக்குள் மாடுகளை வளா்க்க அதன் உரிமையாளா்கள் வரும் மாா்ச் 18-ஆம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் பெறுவதுடன், மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். கடந்த 2024-25-ஆம் ஆண்டில் 4,237 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு ரூ.2.22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராமாவரத்தில் அமையவுள்ள பூங்காவுக்கு சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பெயா் சூட்டப்படும். திருவெற்றியூா் நகராட்சியில் தற்போதைய பாலகிருஷ்ணா காலனி 3- ஆவது தெருவுக்கு நகராட்சியின் முன்னாள் தலைவா் தி.வ.விசுவநாதன் பெயரும், ஜான்ட்ரவா் தெருவுக்கு நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் க.வீராசாமி பெயரும் சூட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட கம்பங்களுடன், அனுமதி பெறாமலும், விதியை மீறியும் கம்பங்கள் நடப்பட்டால் அபராதம் விதிப்பது; உரிய அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டினால் அபராதம் விதிப்பது; வாா்டு உறுப்பினா் நிதியில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது;கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ.உள்விளையாட்டரங்க மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி அளிப்பது உள்ளிட்ட 118 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com