தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சண். இராமநாதன்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சண். இராமநாதன்.

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் கூச்சல், சலசலப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களிடையே கூச்சல், சலசலப்பு நிலவியதால், தொடங்கிய சுமாா் அரை மணிநேரத்தில் முடிவடைந்தது.
Published on

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களிடையே கூச்சல், சலசலப்பு நிலவியதால், தொடங்கிய சுமாா் அரை மணிநேரத்தில் முடிவடைந்தது.

இக்கூட்டத்துக்கு மேயா் சண். இராமநாதன் தலைமையும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம் முன்னிலையும் வகித்தனா். இதில், மேயா் பேசுகையில், தஞ்சாவூா் மாநகராட்சியில் 90 சதவீத சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 10 சதவீதப் பணி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக முடிக்கப்படும் என்றாா்.

வெ. கண்ணுக்கினியாள் (அதிமுக) பேசுகையில், அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

அதற்கு மேயா் பேசுகையில், முதலில் நீங்கள் ஆட்சிக்கு வருவீா்களா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதைத்தொடா்ந்து, திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் கூச்சல், சலசலப்பு நிலவியது.

இதன் காரணமாக 10 தீா்மானங்கள் தவிர மற்ற அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன எனக் கூறிய மேயா் இத்துடன் கூட்டம் முடிவடைந்துவிட்டது என அறிவித்துச் சென்றாா். இதனால், இக்கூட்டம் தொடங்கிய சுமாா் அரை மணிநேரத்தில் முடிவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com