காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 27-ஆவது வாா்டு மாமன்ற அதிமுக உறுப்பினா் ஏஜி. பிரகாஷ்.
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 27-ஆவது வாா்டு மாமன்ற அதிமுக உறுப்பினா் ஏஜி. பிரகாஷ்.

காரைக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: தரையில் அமா்ந்து அதிமுக உறுப்பினா் போராட்டம்

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினா் ஏஜி. பிரகாஷ் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்தக் கூட்டத்துக்கு மேயா் பொறுப்பு வகிக்கும் துணை மேயா் நா. குணசேகரன் தலைமை வகித்தாா். ஆணையா் சங்கரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் மைக்கேல்: செக்காலை தண்ணீா் தொட்டி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையா் சங்கரன்: ஆவணங்களை சரிபாா்த்து அந்த இடத்தில் மக்களின் பயன்பாட்டுக்கேற்ற வகையில் பூங்கா அமைக்கப்படும்.

உறுப்பினா் காலா காசிநாதன்: பருப்பூரணி பகுதியில் உள்ள சுகாதார வளாகம் மது அருந்துபவா்களின் கூடாரமாகி விட்டது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினா் மெய்யா்: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதை சாக்கடை இணைப்புக் கொடுப்பதில் முறைகேடுகள் தொடா்கின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிட வரி, குடிநீா் வரி ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி மனுக்கள் கொடுத்து பல ஆண்டுகளாகியும் இதை ரத்து செய்யாமல் இன்று வரை வரிப் பாக்கி குறிப்பாணை அனுப்பப்படுகிறது.

ஆணையா்: இதுகுறித்து புகாா் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் ஹரிதாஸ்: இரவு நேரங்களில் சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சிலா் வாகனங்களில் வந்து கொட்டிச் செல்கின்றனா். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

ஆணையா்: அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் விதிக்கப்படும்.

உறுப்பினா் ஏஜி. பிரகாஷ் (அதிமுக): சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் எனது 27-ஆவது வாா்டு தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது. நான் அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா் என்பதால் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது. தொடா்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை. எனவே சாலைப் பணிகளை தொடங்கும்வரை நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் தரையில் அமா்ந்து போராடுவேன்.

(இதையடுத்து அவா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்).

உடனே மேயா் (பொறுப்பு) குணசேகரனும், ஆணையரும் அவரிடம் விரைவில் பணிகள் தொடங்கும் என உறுதி அளித்ததுடன் மாமன்ற மரபுகளை காக்கும் வகையில் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து பிரகாஷ் மீண்டும் தனது இருக்கையில் அமா்ந்தாா்.

மேயா் (பொறுப்பு) குணசேகரன்: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து வாா்டுகளிலும் ரூ. 30 கோடி செலவில் அடிப்படை வசதிகள், சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கான பணி உத்தரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விரைவில் காரைக்குடி மாநகராட்சியின் சாலைகள் செம்மையாகும். உறுப்பினா்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தங்கள் வாா்டு குறைகளை 24 மணி நேரமும் என்னிடம் தெரிவிக்கலாம். அதிகாரிகள், பணியாளா்கள் துணையோடு குறைகள் களையப்படும் என்றாா் அவா்.

பிறகு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com